ஆசியாவின் கருப்பு பெண்குதிரை என்று பிரபலமாக அறியப்படும் சுசந்திகா ஜெயசிங்க, டிசம்பர் 17, 1975 அன்று கொழும்பிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள உடுவக கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். வறுமையின் காரணமாக அவரது விளையாட்டு வாழ்க்கையை மேம்படுத்துவதற்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்கு கூட அவருக்கு கடினமாக முகம்கொடுக்க நேர்ந்தது.
அவர் தனது விளையாட்டு வாழ்க்கையை ஆதரித்துக் கொள்வதற்காக இலங்கை இராணுவ தன்னார்வப் படையில் சேர்ந்தார்.
அவர் 1994 அகில இலங்கை தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ மகளிர் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக்கொண்டார். அந்த போட்டியில், அவர் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான கோப்பையை வென்றார், அத்துடன் 1994 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பிற்கான இலங்கை தடகள அணியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றார்.
அவர் 100 மீ, 200 மீ குறுந்தூர ஓட்டவீராங்கனையாவார், அவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 2000ம் ஆண்டு இடம்பெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் மகளிர் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மிகவும் மதிக்கப்படுகிறார். ஆரம்பத்தில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தாலும், போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மரியன் ஜோன்ஸ் போதைப்பொருள் குற்றத்திற்காக ஒப்புக்கொண்டதால் சுசந்திகா ஜெயசிங்கவுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதன்மூலம் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டாவது இலங்கை விளையாட்டு வீரராகவும், குறுந்தூர போட்டியொன்றில் ஒலிம்பிக் அல்லது சர்வதேச அளவிலான பதக்கம் வென்ற முதல் ஆசிய விளையாட்டு வீராங்கனையும் ஆனார்.
அவர் 2007 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், 2007 IAAF உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
1994 முதல் 2007 வரை, ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் உட்பட பல சர்வதேச நிகழ்வுகளில் அவர் பங்கேற்று, ஒன்பது தங்கம், ஆறு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். அவரது திறமைகள் மூலம் சர்வதேச தடகளத்தில் இலங்கை அன்னையின் பெயர் தனக்கென ஒரு இடம்பிடித்து பிரதிபலிக்கிறது.