ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதியினை யுனெஸ்கோ அமைப்பு சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. தாய்மொழி ஒரு தினமாக அறிவிக்கப்படுவதற்குக் காரணம் மொழி தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள்தான். நாம் இப்போது பங்களாதேஷ் என்று அழைக்கும் நாட்டிற்கும் மற்றும் பாகிஸ்தான் நாட்டிற்கும் இடையே அலுவல் மொழி தொடர்பாக ஏற்பட்ட மோதலினால் பலரின் உயிரை காவு வாங்கியது, பின்னர் ஒரு மொழியின் முக்கியத்துவமும், சக்தியும் உலகின் கவனத்தை ஈர்த்தது.
நாம் ஒருவரையொருவர் தொடர்புகொள்வதற்கு மொழி தொடர்பு ஊடகமாக தேவைப்படுகின்றது. எம் ஒவ்வொருவருக்கும் பிறப்பிலிருந்தே ஒரு மொழி இருக்கிறது. அந்த தாய்மொழிகள் கூட பலதரப்பட்டவை. சிங்கள மொழியைப் பற்றி சிந்தித்தால், இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்ப பிராந்திய பேச்சுவழக்குகளில் சேர்க்கப்பட்ட சொற்கள் உள்ளன. தமிழில் கூட பேச்சு மொழியில் சிறிய வட்டார வேறுபாடுகள் உள்ளன. உள்ளூரில் ஒரே மொழியில் வெவ்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் கேலி செய்யாதீர்கள். அனைத்து மொழிகளையும் நாம் மதிக்க வேண்டும். ஏனென்றால் ஒருவரையொருவர் தொடர்புகொள்ளும் சாதனமாக மொழி நம்மிடம் உள்ளது.
அத்துடன் ஆங்கிலம் எமது தாய்மொழியாக இல்லாவிட்டாலும் இலங்கையிலும் ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழியாக மாறியுள்ளது. ஆங்கிலம் பேசத் தெரியாததை அவமானமாக நினைக்கும் சிலர் நம்மில் இருக்கிறார்கள். இன்று உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் ஆங்கிலம் ஒன்று என்பது உண்மைதான். ஆனால் உங்களால் ஆங்கிலம் பேசத் தெரியாது என்றால் வெட்கப்பட வேண்டிய விடயம் அல்ல. இது ஒரு மொழி, ஒரு சர்வதேச மொழி இருந்தால் உலகின் வெவ்வேறு அறிவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது எளிது. நீங்கள் யூடியூப் வீடியோக்களைப் பார்த்தாலும், வெவ்வேறு நாடுகளில் உள்ள கலாச்சாரங்கள் மற்றும் பாடங்களைப் பற்றிய ஏராளமான வீடியோக்களை ஆங்கிலத்தில் காணலாம். தகவல்தொடர்புக்கு மொழி முக்கியமானது என்றாலும், மற்றவர்களை விட உங்களைத் தாழ்வாக அளவிடுவதற்கு மொழியை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்தாதீர்கள். நமக்குத் தெரிந்த தாய்மொழியில் பேசுவதற்கு வெட்கப்பட வேண்டிய தேவையில்லை. ஆனால் நீங்கள் அதிக மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்பினால், கற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் அறிவை அதிகரிக்கவும், உங்கள் மொழி தெரியாதவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் உதவும்.
உலகில் வெவ்வேறு மொழிகள் இவ்வாறு பயன்படுத்தப்படும் போது நாம் அனைவரும் உணரும் ஒரு மொழி உள்ளது. அது மனிதநேய மொழி. எனவே உங்கள் தாய்மொழியை எங்கும் பேச பயப்படாதீர்கள், ஆங்கிலம் போன்ற மொழி பேசாத அல்லது தவறுதலாக வேறு மொழி பேசும் ஒருவரைப் பார்த்து சிரிக்காதீர்கள், கேலிசெய்யதீர்கள் . அவர்கள் அனைவரிடமும் மனிதநேயத்தின் மொழியில் பேசுவோம். அனைத்து மொழிகளையும் மதிப்போம்.