பூக்க இருக்கும் மொட்டுகளை போல இருக்கும் பிள்ளைகளை, மணம் கமழும் மலராக மலர வைக்க ஆசிரியர்கள் பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள். நாள் முழுவதும் தாய் தந்தையின் நிழலில் இருந்த பிள்ளை பாடசாலைக்கு சென்ற முதல் நாள் இருந்து அப்பிள்ளையின் அம்மா அப்பாதான் ஆசிரியர்கள். “அ”, “ஆ” கற்பித்தலைத் தாண்டி, கல்வியின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் பலர் சமூகத்தில் உள்ளனர். நீங்களும் உங்கள் பள்ளி நாட்களை நினைத்துப் பார்த்தால், அன்பை முழு வகுப்பினருக்கும் ஒன்றாக பகிர்ந்து உங்களை ஒரு நல்ல மனிதராக மாற்ற ஆசிரியர்கள் எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது நினைவுக்கு வரும்.
ஆசிரியரின் பங்கு எளிதானது அல்ல. நூறாயிரக்கணக்கான குழந்தைகளுடன் போராடி வெண்கட்டி, கரும்பலகைகள் என மல்லுக்கட்டிய ஆசிரியர் தற்போது தொழில்நுட்பத்துடன் போராடி பிள்ளைகளின் அறிவை வளர்க்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சிறு வயதில் பாடசாலை செல்ல மறுத்து அழுத நாம், இன்று பாடசாலையை கண்டதும் சிறிது நேரம் அருகே நின்று பார்ப்போம். மேலும், நமக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியரைக் கண்டால், மிகவும் உற்சாகமாகப் பேசுவோம். அவர்கள் ஒரு ஆசிரியரைத் தாண்டி எங்களுடன் நெருங்கி பழகியதே அதற்குக் காரணம். ஏனென்றால் அவர் எங்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினரைப் போல அன்பையும் கருணையையும் தந்து எங்களை ஒரு நல்ல குடிமகனாக உருவாக்குவதற்கு முயற்சித்ததால்.
உங்களை ஒரு நல்ல குடிமகனாக மாற்ற கடுமையாக உழைத்த ஆசிரியர்களிடம் முடிந்தவரை பேசுங்கள். இன்று நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். அதற்கு நன்றி சொல்லுங்கள். அதைவிட அதிக சந்தோஷம் வேறு எதுவும் கிடையாது. அவர்களை மறக்காமல் போற்றுவதே உண்மையான ஆசிரியர் தின கொண்டாட்டம் ஆகும்.