வாழ்க்கைக்கு கைகொடுத்தது நீங்கள் தான் தந்தையே...

எமது வாழ்க்கையில் நம் பின்னல் நிற்கும், ஒரு மாபெரும் நிழலாய் நம்மை ஆதரிக்கும் நம் வாழ்வின் ஆணிவேர் எமது தந்தை அல்லது அப்பா. உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோவும் அவரே. ஒரு குழந்தை தாயின் கருவறைக்கு நுழைந்த நாளிலிருந்து, குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைத்து வளர்ப்பதில் தாயை போன்றே தந்தைக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. எனவே இந்த உலகில் உள்ள ஒவ்வொரு தந்தையும் அந்த பொறுப்பை தன்னால் முடிந்தவரை சிறந்த முறையில் நிறைவேற்றுகிறார்கள். ஒரு குழந்தை தன இரண்டு கால்களில் நடக்க கற்றுக்கொடுத்து கைகொடுப்பது தந்தையே. அப்போதிருந்து, ஒரு குழந்தை வளர்ந்து உலகை வெல்லும் வரை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பவரும் அவரே.

ஆயிரம் பொறுப்புகளைச் தன் தோளில் சுமந்த அப்பாக்களுக்குத்தான் தெரியும் வாழ்க்கைச் சுமை. எனவே இந்த தியாகங்களுக்கு மரியாதை மற்றும் பாராட்டுகளை வழங்க உலகம் இப்போது உந்துதல் பெற்றுள்ளது. அதற்கான முயற்சியை முதலில் எடுத்த நாடாக அமெரிக்காவை அடையாளப்படுத்தலாம். 1910 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. உலகின் பல நாடுகள் உலக தந்தையர் தினத்தை இந்த நாளில் கொண்டாடினாலும், சில நாடுகள் தங்களுக்கு ஏற்ற நாட்களில் இதை கொண்டாடுகின்றன. உண்மையில், தங்கள் குடும்பங்களுக்காக தங்கள் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் தியாகம் செய்யும் உலகின் அனைத்து தந்தையர்களையும் ஒரே நாளில் கொண்டாடி கௌரவிக்க முடியாது. ஆனால் சர்வதேச அளவில், இந்த நாள் அவர்களை மதிக்கும் ஒரு வழியாக பயன்படுத்தப்படுகிறது. வாழ்வில் எண்ணற்ற தியாகங்களை செய்யும் தந்தையர்களுக்கு இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்!