வேகமாக நழுவிப் போகும் நேரத்தை நிர்வகிப்போம்

காலம் மிக வேகமாக கடந்து செல்லும் ஒன்றாகும். அதற்கு நம் யாராலும் வரம்புகளை வைக்க முடியாது. கொஞ்சம் உங்களை பற்றி சிந்தித்து பாருங்கள். சிறுவயதில் இருந்து இன்று வரை எவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள்? காலம் எவ்வளவு சீக்கிரம் கடந்தது சென்றிருக்கிறது? ஒருவேளை நீங்கள் இப்போது இளைஞராக இருக்கலாம். அல்லது நடுத்தர வயது திருமண வாழ்க்கையை வாழும்போது குழந்தைகளின் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவது ஒரு தாய் அல்லது தந்தையாக இருக்கலாம். அல்லது குழந்தைகளின் குழந்தைகளை மகிழ்விக்கும் ஒருவராக இருக்கலாம். ஒருவேளை அதிக பொறுப்பு இல்லாத தனியாளாக இருக்கலாம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. சிறுவயது முதல் இன்று நாம் இருக்கும் இடம் வரை பல்வேறு சவால்கள் மற்றும் சாதனைகளை சமாளிக்க நாம் எவ்வளவு நேரம் செலவிட்டோம் என்பதை நாம் மட்டுமே அறிவோம். எனவே இந்த நேரத்தின் மதிப்பை அதிகரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

முதலில், நாம் இன்று என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை பட்டியலிட வேண்டும். இதன் மூலம் நமது வேலைகள் தவறி விடுவதை தவிர்த்துக்கொள்ளலாம். மேலும், சீக்கிரம் முடிக்க வேண்டிய காரியங்களை உடனடியாக முடித்துவிட நாம் கடமைப்பட்டுள்ளோம். இலக்குகள் என்பது நம் வாழ்க்கையில் எப்போதும் இருக்கவேண்டிய ஒரு விடயம். இந்த நேரத்திற்குள் இந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்ற இலக்கு, அந்த வேலையைச் செய்வதற்கான ஒரு உத்வேகத்தைத் தருகிறது. அதுமட்டுமின்றி, அதிக நேரம் எடுக்கும், அதிக முயற்சி தேவைப்படும் வேலையை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அவற்றை செய்தோமேயானால், நமது மன அழுத்தமும் வெகுவாகக் குறையும். அதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதற்குப் பதிலாக, ஒரு நேரத்தில் ஒரு வேலையைச் செய்வதால், தவறுகள் குறைவதோடு, எல்லா வேலைகளும் சிக்கலில் சிக்குவதைத் தவிர்க்கிறது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வேலையின் போது உங்கள் உடலுக்கும் மனதிற்கும் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால், நீங்கள் வேலையைத் தவறவிட மாட்டீர்கள். அது உங்களுக்கு அதிக உத்வேகத்தை மட்டுமே தரும். நீங்கள் என்ன செய்தாலும், நீங்கள் திட்டமிட்டதைச் சரியாகச் செய்திருக்கிறீர்களா? என்று நாள் முடிவில், நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். எனவே, இது எங்களிடமிருந்து விரைவாக நழுவிப் போகும் நேரத்தை நிர்வகிக்க முக்கியமான ஒன்றாகும். இதனை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்க்க மறக்காதீர்கள்.